தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்:
- ஏப்ரல் 6ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறும்.
- வாக்களிக்கச் செல்லும்பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச்செல்ல வேண்டும். (எஃப்.எஃப்.ஜி., இசட்.வி.ஏ. (FFG, ZVA) போன்ற மூன்று ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் வாக்காளர் அடையாள அட்டை)
- வாக்குப்பதிவின்போது வரிசையில் தகுந்த இடைவெளியுடன் நிற்க வேண்டும்.
- வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் கிருமிநாசினி (Hand Sanitizer) கொடுக்கப்பட்டு பின்பு தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். பின்பு ஒரு கையுறை வழங்கப்படும் (வலது கைக்கு மட்டும்). [உங்களது உடல் வெப்பநிலை சராசரியைவிட மிக அதிகமாக இருந்தாலும், கரோனோ வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு இருந்தாலும், தனிமையில் இருந்தாலும் நீங்கள் தனியே வந்து மாலை 6 மணி முதல் 7 மணிவரை வாக்குச்சாவடிக்குச் சென்று தகுந்த கவச உடை அணிந்து (கவச உடை வாக்குச்சாவடி மையத்தில் கோவிட்-19 தொற்று அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியே வழங்கப்படும்) வாக்களிக்கலாம். இந்த நேரம் கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.]
- வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நுழைவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வலது கை உறையை முழுமையாக அணிந்துகொண்டு முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப் (அல்லது உங்களது பாகம் எண் வரிசை எண் விபரத்தை), வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டுசென்று காண்பிக்க வேண்டும். உங்களுடைய அடையாளத்தை உறுதிசெய்த பின்பு முதலாவது தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண்ணை உரத்த குரலில் கூறுவார். இதனைத் தேர்தல் முகவர்கள் உறுதிசெய்த பிறகு நீங்கள் இரண்டாவது தேர்தல் அலுவலரிடம் சென்று 17ஏ பதிவேட்டில் கையொப்பமிட்டு, உங்களுடைய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்க வேண்டும். பிறகு அவர் உங்களுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் சீட்டு (Voters Slip) வழங்குவார். அதைப் பெற்றுக்கொண்டு மூன்றாவது தேர்தல் அலுவலரிடம் சென்று அந்த வாக்காளர்கள் சீட்டைக் கொடுத்த பின்பு அவர் உங்களுக்கு பேலட் யூனிட்டில் வாக்களிக்க அனுமதி வழங்குவார்.
நீங்கள் வாக்களிக்கும் இடத்திற்குச் சென்று உங்களுடைய கையுறை அணிந்த வலது கை விரல்களால் உங்களுக்குரிய வேட்பாளர் பொத்தானைை அழுத்தி பீப் ஒலி வருவதையும், வேட்பாளருக்கு அருகிலுள்ள சிவப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகள் காண்பிக்கப்படுவதையும் உறுதிசெய்யலாம்.
பிறகு வாக்குச்சாவடி மையத்தின் வெளியே நீங்கள் அணிந்துள்ள வலது கையுறையைக் கழற்றி அதற்குரிய நெகிழிக்குப்பைப் பையில் போட்டுவிட்டு வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற வேண்டும். வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத் தவிர மற்றவர்கள் (வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும்) கைப்பேசி கொண்டுசெல்ல அனுமதி கிடையாது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டை இல்லாதபட்சத்தில் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வாக்களிக்கலாம் என ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் விவரத்தைப் பார்க்கலாம்.
- ஆதார் ஆட்டை,
- நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு),
- ஓட்டுநர் உரிமம்,
- கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்),
- புகைப்படத்துடன்கூடிய ஓய்வூதிய ஆவணம்,
- வங்கி, அஞ்சல் அலுவலகங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய கணக்குப் புத்தகம்,
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை,
- அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்,
- தொழிலாளர் நலத் துறையால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் அட்டை,
- மக்கள் தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை (Smart card issued by RGI under NPR),
- நாடளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள்
- இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பல்வேறு வசதிகளைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்து வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கான வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
- தேர்தல் ஆணையத்தின் பி.டபிள்யு.டி. (PWD) என்ற செயலியை கைப்பேசியில் நிறுவி, இதன்மூலம் வாக்குச்சாவடி அலுவலரை அறிந்துகொண்டு சக்கர நாற்காலிக்கு விண்ணப்பிக்கலாம்.
- வாக்களிக்கச் செல்லும் முன் நீங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வலைதளத்திற்குள் சென்று உங்கள் தொகுதியில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் வாக்களிக்கச் செல்லும் முன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனளிக்கலாம்.
- அது மட்டுமல்லாமல் உங்களின் வாக்காளர் அட்டையில் உள்ள தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் elections.tn.gov.in என்ற வலைதளத்திற்குள் சென்று தெரிந்துகொள்ளலாம்.
- இந்த வலைதளத்தில் உங்கள் வாக்குச்சாவடி எங்குள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இதற்கு முன்பு நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நீங்கள் முகக்கவசம் எடுத்துச் செல்ல வேண்டும். வாக்களிக்கச் செல்லும் இடத்தில் நீங்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நூறு விழுக்காடு வாக்களிப்போம்;ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்!