தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். ராமசாமியும் மற்ற நிர்வாகிகளும் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், "தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் கரோனா என்னும் நோயைக் கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்து மக்களைக் காப்பாற்றியதில் இந்தியாவிலேயே நமது முதலமைச்சர்தான் முதன்மையில் உள்ளார்.
மக்களின் வாழ்வாதாரம் பெருகிட தொழில் துறையில் கட்டுப்பாடுகளைச் சிறிது சிறிதாகத் தளர்த்தி இன்று முழுவதுமாகத் தளர்த்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சர்களில் நமது முதலமைச்சர்தான் முதலாவதாக உள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், திரைத் துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் வைத்தோம்.
அவற்றைத் தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதலமைச்சர், திரையரங்குகளில் 50 விழுக்காடு மக்களை படம் பார்க்க அனுமதித்த முதலமைச்சர் இன்று (பிப்ரவரி 12) நூறு விழுக்காடு திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
தொழில் துறை சிறந்து விளங்க பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் முதலமைச்சர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வைத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாகத் திரை உலகினருக்கு நிறைவேற்றிவருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும், தமிழ்த் திரையுலகம் சார்பிலும், கோடானகோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாநில அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு தேர்வு நடத்தக் கூடாது - கார்த்தி சிதம்பரம்