சென்னை: வேளாண் சட்டத்திற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தாம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகே டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருகினைப்புக் குழு சார்பில் 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளை நீக்கவும், மின்சார திருத்த மசோதா 2020ஐ கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய- மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளரிடம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “இந்தப் போராட்டம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல.. சாதாரணமான மக்களுக்கான போராட்டமும் கூடத்தான்.. தமிழ்நாட்டின் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துள்ளனர். இந்திய விவசாயிகள் சங்கத்திடம் முதலமைச்சர் கே பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும், அடுத்தடுத்த கட்டங்களாகப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.
இந்தச் சாலை மறியல் போராட்டத்தினால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுப்படவர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக கைதுசெய்து, மாநகர பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.