தருமபுரி மாவட்டம் வீரப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த ரத்தினம் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம், அரசுத் திட்டத்துக்காக 1988ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து, ரத்தினம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலம் ஆர்ஜிதம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 2000ஆவது ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கடந்த 20 ஆண்டுகளாக மேல் முறையீடு செய்யப்படாத நிலையில், கையகப்படுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பாணையும் வெளியிடப்படவில்லை. அதேவேளை, ரத்தினம் பெயருக்கு நிலத்தை மீண்டும் பெயர் மாற்றம் செய்தும் கொடுக்கவில்லை.
இதையடுத்து, நிலத்தை தனது பெயருக்கு மீண்டும் மாற்றம் செய்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்தினம் தாக்கல் செய்த மனு, நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 20 ஆண்டுகளாக மனுதாரர் பல்வேறு மனுக்களை அளித்தும் அதன் மீது அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இதுபோன்ற விவகாரங்களில் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என தெரிவித்த நீதிபதி, அலுவலர்கள் செய்த பாவத்துக்காக சிலுவை சுமக்க நீதித்துறை ஒன்றும் ஏசு கிறிஸ்து அல்ல என்று காட்டமாக தெரிவித்தார்.
இதேபோல, 10 ஆண்டுகளாக தனது நில ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து தரவில்லை என மனு தாக்கல் செய்திருந்த பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.