சென்னை: 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியது.
மின் வயரைக் கடித்து தற்கொலை
இந்தக் கொலை வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமாரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், அவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், திடீரென மின் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத் துறையினர் தெரிவித்தனர்.
மரணத்தில் சந்தேகம்
இதனையடுத்து ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை பரமசிவம் 2017ஆம் ஆண்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ராம்குமாரை இறந்த பின்பு அவரது உடலை பரிசோதனை செய்த சிறை மருத்துவர், சிறைக்காவலர், வார்டன், மருத்துவ அலுவலர் சையது அப்துல் காதர் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்றது. அவர்கள் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.
உடலில் சிராய்ப்புக் காயங்கள்
குறிப்பாக ராம்குமார் உடலில் 12 சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகவும், ராம்குமார் மின்சாரம் தாக்கி மரணிக்கவில்லை எனவும் ஹிஸ்டோபேதாலஜி மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது.
மேலும் அப்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு, ஆனந்த் ஆகிய இருவரும் ராம்குமார் உடலை ஆய்வு செய்தபோது அவரது மூளை, இதயத் திசுக்கள், நுரையீரல், கல்லீரல், நாக்கு, உதடு உள்ளிட்ட உறுப்புகள் நல்ல நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தலைமை மருத்துவரிடம் விசாரணை
இந்த நிலையில் இன்று (அக்.28) ராம்குமார் உடலை உடற்கூராய்வு செய்த தலைமை மருத்துவர் செல்வகுமார், மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். முக்கிய சாட்சியமாக பார்க்கப்படக் கூடிய இந்த மருத்துவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி