சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோர் வழக்குகளை உடனடியாக முடிக்க, இணையத்தில் அபராதம் செலுத்த ஏதுவாக மெய்நிகர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், அதிகவேகமாக வாகனத்தை ஓட்டுதல், சிக்னலில் நிற்காமல் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு காவல் துறையினர் அபராதம் விதிப்பார்கள். இந்த அபராதத் தொகையை போக்குவரத்து காவல் துறையினரிடம் செலுத்தலாம். அல்லது சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களிலும் செலுத்தலாம்.
இவ்வாறு நீதிமன்றங்களில் அபராதம் செலுத்த வேலை நாட்களில் தான் ஒருவர் வரவேண்டியதுள்ளது. எனவே, இந்த அபராதத் தொகையை இணையம் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது. ‘விர்சுவல் கோர்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த முறை நம் நாட்டிலேயே டெல்லியில் முதலில் தொடங்கப்பட்டது.
அதை தொடர்ந்து சென்னையில் இந்த வசதி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட்டது. இதை, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சென்னை உயர் நீதிமன்ற இ-கமிட்டி தலைவரும், நீதிபதியுமான டி.எஸ்.சிவஞானம், இ-கமிட்டி உறுப்பினர்களான நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, எம்.சுந்தர், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, சி.சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், இ-பைலிங், இ- கோர்ட் பீஸ் என்ற வரிசையில் தற்போது போக்குவரத்து விதிகளை மீறுவோர் அதற்கான அபராதத்தை இணையம் மூலமாக செலுத்தும் வகையில் இந்த மெய்நிகர் நீதிமன்றங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் இணையம் மூலமாக எளிதான முறையில் அபராதத்தை செலுத்தலாம் அல்லது வழக்கை எதிர்கொள்ள சம்மதம் தெரிவிக்கலாம். வழக்கு விவரங்கள், வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க கோரலாம். இதன்மூலம் நீதிமன்ற நேரம் விரயமாவது தவிர்க்கப்பட்டு, நீதித்துறையின் பணிச்சுமையும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த புதிய நடைமுறையின்படி, காவல் துறையினர் தரும் ‘இ-செல்லான்’, விதிமீறலில் ஈடுபட்டவரின் கைப்பேசி எண், வாகனப்பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை ‘விர்சுவல் கோர்ட்ஸ்’ இணையதளத்தில் பதிவிட்டு, நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை ‘இணையம்’ மூலம் செலுத்தலாம். ஒருவேளை அபராதத் தொகையை செலுத்த விரும்பாதவர்கள், வக்கீல் வைத்து வழக்கை எதிர்கொள்ளவும் உரிமையுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.