சென்னை: ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கடந்த இரு மாதங்களாக வன விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அலைந்து கொண்டிருந்தது.
சூழலியல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தலின்படி, வன அலுவலர்கள் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் அமைத்து விலங்குகளின் தண்ணீர் தாகத்தை போக்கினர். இதுகுறித்து ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், "சுமார் 90 விழுக்காடு காட்டுத்தீ விபத்து மனிதர்களால்தான் பரவுகிறது. மீதமுள்ள 10 விழுக்காடுதான் காடுகளில் கடுமையான வறட்சி ஏற்படும் போது மூங்கில் உள்ளிட்ட மரங்களின் கிளைகள் உரசும்போது தீ விபத்து ஏற்படுகிறது" என்றார்.
கடந்த காலங்களில் தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலைப் பகுதியில், கடந்த 2018 ஆம் ஆண்டு கடும் காட்டுத்தீ ஏற்பட்டது. இதே போல நீலகிரி அருகேயுள்ள பந்திப்பூர் (கர்நாடகா மாநிலம்), தேனி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் காட்டுப் பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இவ்வருடம் காட்டுத்தீ விபத்து ஏற்பட வாய்ப்புக்கள் குறைவு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மனிதர்கள் விலங்குகளைப் பயமுறுத்துவதற்கு சில நேரங்களில் நெருப்பைக் காட்டி, அதனை அணைக்காமல் காட்டிலேயே போட்டு விடுகிறார்கள். மேலும், மனிதர்கள் சிகரெட், பீடியைப் பற்ற வைத்துவிட்,டு நன்றாக அணைக்காமல் புதர்களில் வீசும்போதும் இந்த தீ விபத்து ஏற்படுகிறது.
காடுகளில் வனத்துறை அலுவலர்களுக்குத் தெரியாமல் சமைக்கின்றனர். எனினும், தற்போது மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் காட்டுத்தீ பரவ வாய்ப்பில்லை. ஒரு பெருமழை பெய்தால் அதன் ஈரத்தன்மை இரண்டு வாரத்திற்கு இருக்கும்" என்று கூறினார்.
“இதனைப் போலவே தினந்தோறும் காடுகள் பகுதிகளில் மழை பெய்வதால் காடுகளில் உள்ள சிறிய குளம் குட்டைகளில் நீர் நிறைந்துள்ளது. மேலும், புல்வெளிகள் உள்ளிட்ட விலங்குகளின் உணவுகளும் நல்ல செழுமையாக இருப்பதால் விலங்குகள் காடுகளிலே தங்குவதாகக் கூறப்படுகிறது.
"யானைகளின் முக்கியமான உணவு புல் ஆகும். எனவே இந்த மழையினால் யானைகள் இரையைத் தேடி காட்டுக்கு வெளியே வர வாய்ப்புகள் குறைவு" என்கிறார் வனவிலங்கு ஆய்வாளர் கொ. அசோகச் சக்கரவர்த்தி.
இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் பேசும்போது, "ஏற்கனவே காடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீரை நிரப்பியுள்ளோம். இந்த மழை வனவிலங்குகளுக்கு எல்லா வகையிலும் கைகொடுக்கும். காட்டுத்தீயைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மழையினால் காட்டு தீ விபத்து நடக்காது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை: இளநீர் விற்பனை அமோகம்!