சென்னையில் கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக பேனர் அறுந்து அவர் மீது விழுந்தது. அதில் நிலைதடுமாறி வண்டியிலிருந்து விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அரசியல் கட்சித் தலைவர்களால் பதாகைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடும்படி செய்தது. இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டிவந்த பிகாரைச் சேர்ந்த மனோஜ் யாதவ் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல் ஐபிசி பிரிவு 279, அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் ஐபிசி பிரிவு 304(அ) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் ஐபிசி 336 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் எளிதில் முன்பிணையில் வெளிவந்து விடுவார் என்பது அதிருப்தியை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது முன்பிணையில் வெளிவரமுடியாத ஐபிசி 308 கொலையாகாத மரணத்தை ஏற்படுத்துதல் என்கிற பிரிவின் கீழ் பரங்கிமலைப் போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேகநாதன் பதாகை வைக்க பயன்படும் இரும்புச் சட்டம் வாடகைக்கு விடும் தொழில் செய்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.