கரோனா தொற்று பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது கரோனா தொற்று பரவல் சற்று குறைந்துவருவாதல், அரசு பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதையடுத்து வழிகாட்டுநெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கரோனா தொற்றின் மூன்றாம் அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தாக்கலாம் என மருத்துவ வல்லூநர்கள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் அவரமாக பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள், "ஊரடங்கு மூலமாக மட்டுமே கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
எனவே பள்ளிகளை திறப்பது தொற்று பரவலுக்கு வழிவகுக்கலாம்" எனத் தெரிவித்தனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (செப்.1) 557 மாணவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அம்மாணவி அவரது வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டார். அதேபோல், அரியலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கும்; கடலூர் மஞ்சக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியைக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு