சென்னை: தமிழ்நாட்டில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு அறிக்கைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு, உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும் நீர்வள ஆதராங்களைப் பெருக்கி வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கான நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றிவருவதகாவும், கடந்த 2020ஆம் ஆண்டே இதுதொர்பாக அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பரிந்துரைகளின்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளதாகவும், நீர் நிலைகளை பதிவுசெய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதேபோல நீர் நிலை கட்டுமானங்களுக்கு எந்தவித மின்இணைப்பும் தரக்கூடாது, ஊரக வளர்ச்சித்துறை கட்டடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்கக்கூடாது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டது என்ன?
மேலும், நீர் வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர் நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதில் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஆக்கிமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள், குளங்களை உள்ளூர் விவசாயிகள் இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட உள்ளததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நீர் நிலை ஆக்கிரமிப்புத் தொடர்பான புள்ளிவிவரங்களைச் சேகரித்து, வருவாய்த்துறை செயலாளருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நீர் நிலை ஆக்கிமிப்புகளை அகற்றுவது மட்டுமல்லாமல், நீர் நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்ததுபோல் பேணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்டு உரிய தரத்துடன் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையைப் பொறுத்தவரை நீர் நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு, மழைக்காலங்களில் திடீர் என திறந்துவிடப்பட்டு வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நவம்பர் மாதம் நான்குமுறை பெய்த கனமழையால், ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் மழை இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டுவருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்டு கமிஷனை... வெட்டு முன்பணம் 30 ஆயிரத்தை - பிடிஓவுக்கு கைப்பூட்டு!