சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெற்றியூர் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்று கால்நடை மருத்துவர்கள் மூலம் கருத்தடை செய்வது வழக்கம்.
இந்நிலையில், இப்பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள மாநகராட்சி ஊழியர்களான ரமண கிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன் என்ற இருவரும் குடிபோதையில் 50க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து, வாகனங்களில் ஏற்றிச்சென்று கருத்தடை செய்துள்ளனர். பின் அந்த நாய்களை எண்ணூர் சிவகாமி நகர் கொண்டுவந்து விட்டுள்ளனர்.
சிகிச்சையினால் மிரண்டு போன நாய்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்து குதறியுள்ளது. இதில் அனிஷ்(6), கோபி(16), சுபாஷ்(11) ஆகிய மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிபோதையில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் இருவரையும் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காவல்துறையினர் பொதுமக்களின் பிடியில் இருந்த இருவரையும் விடுவித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பணியில் உள்ள மற்ற சில ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.