ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் விசாரித்துவருகின்றனர்.
அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன், 1995ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை திறந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், அதன்பின்னர், 2013ஆம் ஆண்டு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து திடீரென ஸ்டெர்லைட் நிர்வாகத்தை முழுமையாக மூட வேண்டும் எனப் போராட ஆரம்பித்தனர்.
2018ஆம் ஆண்டு மே 21ஆம் தேதிவரை ஸ்டெர்லைட் ஆலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, மே 23ஆம் தேதி ஸ்டெர்லைட் நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. அதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடுஅரசுதான் நடத்தியது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடியில் காற்று, நீர் மாசு குறைந்துவிட்டதாக அரசு கூறுவது தவறு. வேலூர் தோல் தொழிற்சாலை, திருப்பூர் நூல் ஆலைகளைவிட ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துகிறதா? தூத்துக்குடி சிப்காட்டில் மாசு ஏற்படுத்தக்கூடிய ஆலைகளை மூட வேண்டும் என்றால், முதலில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தைத்தான் மூட வேண்டும். அதேபோல அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, தூத்துக்குடியில் லட்சத்தில் 63 பேர்தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுகின்றனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி மக்கள் வாழ்வதற்கு சென்னை அண்ணா நகரைவிட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது. மனித உடல்நல குறியீட்டின் பட்டியலில் தூத்துக்குடி மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வின்படி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னரும் தூத்துக்குடியில் காற்று மாசில் எந்த மாற்றமும் இல்லை, தொடர்ந்த 90 AQI (air quantity index) அளவில்தான் உள்ளது. இது சென்னை, டெல்லியைவிட குறைவானதுதான்” என வாதிட்டார். வாதத்தை கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளது.