தமிழ்நாடு அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று மூன்றாவது நாளாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், மாநில அரசின் விதிகளை ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக பின்பற்றியுள்ளது. அதனால், ஆலையை மூடியது நியாயமற்றது. ஆலையை மூடுவதற்கு முன்பாக விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்தவொரு ஒரு நோட்டீஸும் அளிக்கவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் தாமிரக் கழிவு உள்ளிட்ட திடக்கழிவுகள் அபாயகரமானவை அல்ல என்று கடந்தாண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. எனவே, தாமிரக் கழிவை அகற்றவில்லை என்ற காரணம் கூறி ஆலையை மூட முடியாது.
தற்போது அரசியல்வாதிகளுக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறது என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் வாதம் முடிவடையாததால், அதன் மீதான விசாரணை மீண்டும் இன்று தொடர்கிறது.