சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின்கீழ் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, ”வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலியில் நான்கு சிறப்பு நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்கப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான குறைந்தபட்ச இழப்பீடு தொகை 1 லட்சத்திலிருந்து 12 லட்சம் ரூபாய்வரை உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய ஆணையம் அமைக்கப்படும். தன்னாட்சியுடன் செயல்படக்கூடிய இந்த அமைப்புக்கு நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளைக் கையாள தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.
எனினும் இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் கிருஷ்ணகிரி மதுரை திருநெல்வேலி, சேலம் என நான்கு மாவட்டங்களிலும் புதிய நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மதுரையிலும் திருநெல்வேலியிலும் வழக்குகள் கூடுதலாக நிலுவையில் இருப்பதால் அங்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
சாதி பேதம் அற்ற நிலையைக் கடைப்பிடிக்கும் கிராமங்களில் சாதி, பேதமற்ற மயானங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் ஊக்கப்படுத்தும் வகையில் அடிப்படை வளர்ச்சிக்கு கூடுதலாக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மை கருதி 85 ஆயிரம் முதல் எட்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்வரை வழங்கப்படுகிறது” என்றார்.
இந்த அறிவிப்பிற்கு தொல். திருமாவளவன் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ”பெரியார் வழியில் சமூகநீதி அரசை வெற்றிகரமாக நடத்திவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் வகையில் பொது சுடுகாடுகளை நடைமுறைப்படுத்தும் ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். முதலமைச்சரைப் பாராட்டுகிறோம்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க ஏதுவாக கூடுதல் நீதிமன்றங்களை சேலம், கிருஷணகிரி, மதுரை, திருநெல்வேலியில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ள முதலமைச்சருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்