ஆறு முதல் 14 வரையிலான வயதுடையவர்களுக்கு கட்டாய இலவச கல்வி கிடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி மே 29 இல் முடிவடையும்.
ஆனால், இந்தாண்டு கரோனா தாக்கத்தால் அந்த நடைமுறை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ”இந்தாண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என அரசு இதுவரை அறிவிக்கவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கிவிட்டன. கல்விக் கட்டணத்தில் 40 விழுக்காட்டை முதல் தவணையாக வசூலிக்கலாம் என உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 விழுக்காடு இலவச மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட உத்தரவிட வேண்டும். அவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.
இடைக்கால கோரிக்கையாக எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஒதுக்கி வைக்க உத்தரவிட வேண்டும்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் ?