சென்னை: அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுத்தேர்வின்போது தேர்வர்கள் அச்சடிக்கப்பட்ட கையேடுகள், புத்தகங்கள், துண்டுச்சீட்டுகள் வைத்திருந்தால், அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு வெளியேற்றப்படுவர்.
புத்தகங்கள், துண்டுச்சீட்டுகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும், அறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு தேர்வர் துண்டுத்தாளை தன்வசம் வைத்திருந்து பார்த்து எழுதினாலோ, எழுத முயற்சித்தாலோ, அவர் எழுதிய அனைத்துப் பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.
தேர்வர்கள் தேர்வறையில் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்புகொண்டு, உதவி பெற நிர்பந்தித்து இருந்தால், அப்பருவத்தேர்வு தடை செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுதத்தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்டம் செய்தால் அப்பருவத்தேர்வு ரத்து செய்வதுடன் தேர்வு எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படும்.
விடைத்தாளை பரிமாற்றம் செய்தால், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விடைத்தாளை வெளியே அனுப்பினால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கான ஆறு பருவ தேர்வுகள் ரத்து செய்யப்படும். விடைத்தாளில் விடை எழுதி அதை பிறருக்கு வழங்கும் வகையில் தூக்கி எறிந்தால், அப்பாடத்தேர்வு ரத்து செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Weather News:தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை!