புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அம்மாநில அமைச்சரவை முடிவு செய்து துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. துணைநிலை ஆளுநர், அமைச்சரவையின் முடிவை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.
10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் -மாணவி தாயார் கோரிக்கை:
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்த மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், “கடந்த 2016 -17ஆம் ஆண்டிலிருந்து அரசு பள்ளியில் பயின்ற 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தனியார் பள்ளியில் பயின்ற மாணர்வர்கள் 243 பேர் முதல் 402 பேர்வரை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
வழக்கில் மத்திய, மாநில விளக்கமளிக்க உத்தரவு:
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (டிச. 17) விசாரணைக்கு வந்தது. அப்போது 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையின் முடிவு குறித்து சில விளக்கங்கள் கேட்டு புதுச்சேரி அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக துணை நிலை ஆளுநர் வெளியிட்ட அறிக்கையை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், மனு தொடர்பாக டிசம்பர் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க...சென்னையில் கல்லூரி, மாணவர் விடுதிகளில் பரிசோதனை தீவிரம்!