தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களையும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் 125 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
முதலமைச்சராகும் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சராக வரும் மே 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக நாளை அக்கட்சி சார்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே கரோனா தொற்று காரணமாக பதவி ஏற்பு விழா மிக எளிமையான முறையில் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். இனி அடுத்தடுத்து நடைபெறும் நெறிமுறைகள் பின்வருமாறு,
அடுத்தது என்ன ?
* 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுவர்.
* அதிமுக, திமுக உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தும்.
* அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
* திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவர் முதலமைச்சராக பதவியேற்பார்.
* தோல்வியை ஏற்று தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார்.
* புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்துவார்.
* இதற்கிடையில் பெரும்பான்மை கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி முக ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோருவார்.
* உரிமை கோரிய ஸ்டாலினுக்கு ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுப்பார்.
* அழைப்பின் பேரில் ஆளுநரை சந்திக்கும் முக ஸ்டாலின், தன் தலைமையில் பதவியேற்க போகும் அமைச்சரைவை பட்டியலையும் ஆளுநரிடம் வழங்குவார். பதவியேற்கும் நேரம், நாள், இடம் அப்போதே உறுதி செய்யப்படும்.
* முதலமைச்சராக முக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
* முந்தைய அரசு கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பும், புதிய அரசு அமைக்கப்பட்டதற்கான அறிவிப்பும் பொதுத்துறை சார்பில் வெளியாகும்.
* தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு அவருக்கு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்.
* தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் 234 பேரும் பதவியேற்பர்.