தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (மே.2) வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தற்போதையை நிலவரப்படி, திமுக தனித்து நின்ற தொகுதிகளில் 115 இடங்களில் வெற்றிப் பெற்றும், 17 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் வெற்றி உள்பட ஏறத்தாழ 159 இடங்களில் திமுக வெற்றி உறுதியாகி உள்ளது.
திமுக வேட்பாளராக கொளத்தூரில் களம் கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், 1,05,794 வாக்குகளை பெற்றுள்ளார். தற்போது வெற்றிப்பெற்றுள்ள திமுக, சட்டப்பேரவை உறுப்பினர்களை கூட்டி முறையாக தலைவரை தேர்ந்தெடுத்து ஆட்சி அமைப்போம். பதவியேற்பு விழா, கரோனா சூழலால் மிகவும் எளிமையான முறையில், ஆளுநர் மாளிகையிலேயே நடைபெறும் என தெரிவித்திருந்த நிலையில், வரும் 7ஆம் தேதி முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (மே.4) செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.