தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவராக ஸ்டாலின் களம் கண்ட முதல் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களையும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் 124 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. 1971இல் திமுக தலைவராக கருணாநிதி களம் கண்ட முதல் தேர்தலில் திமுக கூட்டணி 205 இடங்களையும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் 184 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு முன்பும் பின்பும்:
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று இன்று காலை மரியாதை செலுத்தினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தமிழ்நாடு மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்கு முன்பு மே 1ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார்.
அண்ணா, கருணாநிதி வழியில்
அண்ணா, கருணாநிதி வழியில் இவரும் ஆட்சி அமைப்பார் என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் விதமாக இவர் கரோனாவை காரணம் காட்டி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மே 7ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழா கரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.