சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரங்களை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. கரோனா காலத்தில் காணொலி மூலம் 'எல்லோரும் நம்முடன்' என்ற தலைப்பில் ஸ்டாலின் பிரச்சாரங்களை மேற்கொண்டார். அதோடு, திமுக முன்னணி தலைவர்களான கனிமொழி, ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில், ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை புகார் பெட்டி மூலம் பெற்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் பிப்ரவரி 4 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கும் ஸ்டாலின், பிப்ரவரி 8 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்பார் என திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு! - மு.க.ஸ்டாலின்