சென்னை: தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து 125 இடங்களிலும், உதயசூரியன் சின்னத்தில் நின்ற கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வென்றன.
தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவியேற்கிறார் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் நேற்று (மே 4) அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை 10.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு 11 பேர் மரணம்: நெஞ்சை உருக்கும் ஓலங்கள்