கரோனா தாக்குதல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இதனால் பெரும்சிரமத்திற்கு ஆளாயினர். இந்நிலையில், அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 28ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 26ஆம் தேதி வரையும் துணைத்தேர்வு நடைபெறுகிறது.
மத்திய சென்னை பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, முகக்கவசம் வழங்கி கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தனி மனித இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு அறையில் உட்கார வைக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் படிப்பதற்காக காத்திருக்கும் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு விதிமுறைகள் அடிப்படையில் மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, படிப்பதற்கு 10 நிமிடம் அளிக்கப்பட்டது. இத்தேர்வு காலை 10:15 மணி முதல் பகல் 1:15 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கெல்லீஸ் குழந்தைகள் இல்ல வளாகத்தில் சிறுமியருக்கான கூர்நோக்கு இல்ல கட்டடம் திறப்பு!