இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனப்படுகொலை ஈழத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டனர். எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் தமிழர்களின் நினைவில் என்றுமே ஆறாத வடுவாக இனப்படுகொலை இருக்கும். அந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், மே 17 இயக்கத்தின் சார்பாக தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.
முன்னதாக கலைவாணர் அரங்கம் முதல் விருந்தினர் மாளிகை வரை மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி பேரணி நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் முதல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். போரில் பலியானவர்களுக்கு சுடர் விளக்கு ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ”தமிழீழ இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஈழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்று ஏகமனதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அந்த இனப்படுகொலைக்கு தீர்வாக, தமிழின மக்களுக்காக தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் நினைவேந்தலுக்கு எந்த ஒரு அடையாளம் இல்லாமல் ஒன்று கூடியுள்ளார்கள்.
இந்த நினைவேந்தலை ஏன் அரசு தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் அரசே இந்த நினைவேந்தலை நடத்தியிருக்க வேண்டும். தமிழீழ விடுதலையை முன்மொழிந்து மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் வைக்க வேண்டும். மேலும் நினைவேந்தல் நிகழ்வை உலக தமிழர்கள் பங்கேற்கும் வகையில் அரசே நிகழ்வாக நடத்த வேண்டும்” என்றார்.