கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்றுவரை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வீட்டு வேலை செய்வோர், தூய்மைப் பணியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வருமானம் இல்லாமல் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
இதனால் உணவு தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அரசு நிவாரணத் தொகையாக ரூபாய் 1,000 வழங்கியது. குடும்பம் நடத்துபவர்களுக்குத் தெரியும் 1,000 ரூபாயைக் கொண்டு என்ன செய்யமுடியும் என்று. இந்த நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகள் இதைவிட மிக மோசமான நிலையில் தவித்து வருகின்றனர்.
சென்னை, பல்லாவரம் வெட்டர்லைன்ஸ் பகுதியில் உள்ள சர்ச்சிற்குச் சொந்தமான மான்போர்ட் குடியிருப்பில் 18 பார்வை மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் வசித்துவரும் இவர்கள், ஊரடங்கு காலத்திலிருந்து தற்போது வரை கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களில் பலர் உழைத்து வாழ்ந்து வந்தனர். ரயில் மற்றும் நடைமேடை, முக்கியச் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் பென்சில், பேனா, பர்பி, ஊதுவத்தி உள்ளிட்டப் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் இங்குள்ள 15 பேர் அடங்கிய இசைக்குழு சர்ச் மட்டுமின்றி, பொது இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருமானம் ஈட்டி வந்தனர்.
அந்த வருமானத்தை நம்பிதான் இவர்களின் வாழ்வாதாரம் இருந்தது. ஆனால், ஊரடங்கால் புறநகர் மின்சார ரயிலில் அனைவரும் பயணம் செய்ய முடியாத நிலை இருந்தபோது, வியாபாரம் இல்லாமலும், இசை நிகழ்ச்சிகள் இல்லாமலும் அடுத்த வேளை உணவுப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையிலும் தவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே தன்னார்வலர்களின் உதவியால் தாங்கள் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், இந்த இக்கட்டான சூழலில் தமிழ்நாடு அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது;
'முன்பெல்லாம் மின்சார ரயில்களில் தின்பண்டங்கள், இதரப் பொருட்களை விற்று ஒரு நாளைக்கு 300 அல்லது 400 ரூபாய் வருமானம் ஈட்டி வந்தோம். அதேபோல் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சி போன்றவற்றில் இசை நிகழ்ச்சி செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்து வந்தோம்.
தற்போது மின்சார ரயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ளன. கரோனா தொற்றால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் மண்டபங்களில் பெரிதாக நடைபெறவில்லை. இதனால் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றோம். வருமானம் இல்லாமல் மிகுந்த நெருக்கடியில் உள்ளோம்.
கரோனாவிற்கு முன்பு ஓரளவுக்கு வருமானம் இருந்தது. அதை வைத்து தினந்தோறும் வாழ்க்கை நடத்தி வந்தோம். கரோனா தொற்று வந்தவுடன் எந்த ஒரு வருமானமும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து இருந்தபோது சில தொண்டு நிறுவனங்கள் கொடுத்ததையும் அரசு கொடுத்த 1,000 ரூபாய் பணத்தையும் வைத்துப் பிழைத்தோம்.
எட்டு மாதங்களாக எந்த ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறோம் என்று தெரியாமல் நிர்கதியாய் உள்ளோம்.
தற்போது எங்களுக்கு வருமானம் எதுவும் இல்லாததால், தமிழ்நாடு அரசு வழங்கும் மாதாந்திர ஊதியமான ஆயிரம் ரூபாயை உயர்த்தி வழங்க வேண்டும். ரேஷன் பொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளாக மாதாந்திர ஊதியத்தை மூவாயிரம் ரூபாயாக உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் இதுவரை அரசு செவிமடுக்கவில்லை. இது எங்களை ஏமாற்றுவது போல்தான் இருக்கிறது. மேலும் எங்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' என்கின்றனர்.
விரைவில் இந்த கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக உள்ளது. தமிழ்நாடு அரசு அவர்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!