பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 2 மணிக்கு துபாயிலிருந்து, எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு தனி விமானம் காலியாக வந்தது.
இதற்கிடையே பிரபல தனியாா் மருத்துவமனையை சோ்ந்த 21 மருத்துவர்கள், 151 செவிலியர்கள் என மொத்தம் 172 பேரை கொண்ட மருத்துவக் குழுவினா், அதிகாலை ஒரு மணிக்கு விமான நிலையத்திற்கு, மருத்துவமனை வாகனங்களில் அழைத்து வரப்பட்டனா். தனி மனித இடைவெளியுடன் வரிசைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு, மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டன. பின்பு அவா்கள் அனைவரும் எமிரேட்ஸ் சிறப்பு தனி விமானத்தில், இன்று அதிகாலை 4.50 மணிக்கு சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, துபாயில் உள்ள ’துபாய் ஹெல்த் ஆா்கனைசேஷன்’ என்ற அமைப்பு, 3 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் இக்குழுவினரை துபாய்க்கு அழைத்துச் சென்றதாக கூறினர்.
கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியா்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவக் காரணத்தின் அடிப்படையில் ஐக்கிய அரபு அரசு இந்திய அரசுடன் பேசி, சிறப்பு அனுமதி பெற்றுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்ததன் பேரில் அவர்கள் துபாய் சென்றுள்ளனா். ஐக்கிய அரபு நாடுகளில் 3 மாதங்கள் மருத்துவப்பணிகள் முடிந்த பின்னர், அக்குழு இந்தியா திரும்பும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!