கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து தொடர்வண்டி போக்குவரத்தை பசுமையாக்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் 270 கிலோமீட்டர் தொலைவிலான வழித்தடத்தை மின் வழித்தடமாக்க தென்னக ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தென்னக ரயில்வே சார்பாக 4.74 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடர்வண்டி நிலையம், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு ஆகிய தொடர்வண்டி நிலையங்களிலும், மதுரை, திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்திலும், திருச்சி பொன்மலை பணிமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மின் உற்பத்தித் தகடுகள் இதற்காக பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக 2.69 மெகாவாட் அளவுக்கு கூரைகள்மீது சூரிய ஒளி மின் உற்பத்தித் தகடுகள் பதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்தப் பணியை பெரம்பூரைச் சேர்ந்த நிறுவனமும், திருச்சி பொன்மலை தொழிற்சாலையும் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், பயன்படுத்தாத தொடர்வண்டி நிலையங்களில் 67 மெகாவாட் திறனுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக 300 ஏக்கர் காலி நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம், தொடர்வண்டித்துறை எரிசக்தி மேலாண் நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக தண்டவாளங்கள் அருகே 160 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது, ஒட்டுமொத்தமாக தென்னக தொடர்வண்டித்துறை வசம் 10.5 மெகா வாட் திறனுக்கு காற்றாலை நிலையம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்ததால் கடந்த நிதியாண்டில் 16.64 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் வழங்கப்படுவது நிறுத்தம்