சென்னை, டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தமிழ் பெயர்ப் பலகை நீக்கப்பட்டுள்ளதாக இன்று காலை முதலே ட்விட்டரில் தகவல்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.
இந்தியை மூன்றாவது மொழியாக ஏற்காத போதே தமிழ் தூக்கி எறியப்படுவதாகவும் இணையத்தில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அத்துடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்தி - ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பெயர்ப் பலகை இருக்கும் புகைப்படமும் வைரலானது.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ் பெயர்ப் பலகை அகற்றப்படவில்லை என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் முதலில் தமிழிலும், அடுத்து இந்தியிலும் கடைசியில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. தமிழ்ப் பெயர்ப் பலகையை நீக்கபடவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெயர்ப் பலகை இந்தியில் மட்டுமே இருக்கும்படி புகைப்படம் எடுத்து அவற்றை பரப்புவது தவறு என்றும் தென்னக ரயில்வே கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 354 இந்தியர்கள் மீட்பு!