கேரளா மாநிலம் பாலக்காட்டில் வெடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதி ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வன விலங்குகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மனிதர்கள் - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டனர்.
இதற்காக கேரள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில், தென் மண்டல வன விலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மூத்த அலுவலர், அமைதிப் பள்ளத்தாக்கு வனக்காப்பாளர், மன்னார்காடு மற்றும் புனலூர் மண்டல வன அலுவலர், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய குழுவையும் நியமித்துள்ளனர்.
மேலும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால நிர்வாக திட்டத்தையும் சமர்ப்பிக்கவும் இக்குழுவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அமைதிப் பள்ளத்தாக்கு வனக்காப்பாளர் இதற்கு சிறப்பு அலுவலராகச் செயல்பட்டு, தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தால், அது எந்த நிலையில் உள்ளது எனத் தெரிவிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலம் இதுதொடர்பாக புலன் விசாரணை, கைது நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள வனத்துறைக்கு உத்தரவிட்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: யானை கொலையும் பிரித்விராஜ் கூறும் உண்மை பின்னணியும்!