சென்னை: சூளைமேடு வீரபாண்டி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர், செல்வம். இவர் செங்குன்றம் பகுதியில் கார் லைனிங் செய்யும் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி பிரகாஷ் (24), நித்தியானந்தம் (21) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் திருமணம் முடித்து தந்தையுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், இளைய மகன் நித்தியனந்தம் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தந்தை செல்வத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும்(மார்ச்.16) அதேபோல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நித்தியானந்தத்தை தந்தை செல்வம் கண்டித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து செல்வத்தை வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டு தப்பியோடினார்.
கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வத்தை அவரது உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நித்தியானந்தத்தை தேடி வந்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வம், ரத்தம் அதிகமாக வெளியேறியதால் இன்று(மார்ச்.17) காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்த நித்தியானந்தத்தை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையால் பெற்ற தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் என்கவுன்ட்டர் செய்த ரவுடி உடலை ஆய்வு செய்த நீதிபதி!