சென்னை: செங்குன்றத்தை அடுத்த அலாமதியை சேர்ந்தவர் ராஜசேகர் என்ற அப்பு (30). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 23 வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் நகை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜசேகர் என்ற அப்புவை நேற்று காலை 08.30 மணியளவில் மணலி பாரதியார் தெருவில் வைத்து கைது செய்து கொடுங்கையூர் எவரெடி காலனி மூன்றாவது தெருவில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அவர் திருடிய நகைகளை செங்குன்றத்தில் உள்ள அவரது நண்பர் ஆட்டோ ஓட்டுநர் சம்பத்திடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜசேகரை செங்குன்றம் அழைத்துச்சென்று பார்த்த போது அவர் சொன்ன இடத்தில் சம்பத் இல்லை. இதனால் ராஜசேகர் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது குற்றவாளி ராஜசேகருக்கு மதியம் 1.00 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கொடுங்கையூர் போலீசார் அவரை தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் மீண்டும் ராஜசேகரை போலீசார் போலீஸ் பூத்திருக்கு அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர். அப்போது மீண்டும் ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி உள்ளார். இதையடுத்து மாலை 4 மணி அளவில் பவித்ரா மருத்துமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது மருத்துவர்கள் ராஜசேகர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கொடுங்கையூர் போலீசார் ராஜசேகர் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் காவல்துறை விசாரணை செய்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், ராஜசேகரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்று விட்டதாகவும், தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். உயிரிழந்த ராஜசேகர் தொடையில் காயம் இருந்ததாக தகவல் வெளியானது. விசாரணை கைதி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.
மேலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 176 சட்டப்பிரிவு கீழ் உயர்காவல்துறை அலுவலர்கள் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உட்பட பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 காவலர்கள் இடமும் மாஜிஸ்திரேட் லட்சுமி இன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் லட்சுமி முன்னிலையில் ராஜசேகரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்தநிலையில் உயிரிழந்த ராஜசேகரனின் அண்ணன் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் என் சகோதரர் ராஜசேகரை பார்த்து இரண்டு வாரம் ஆகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து போலீசார் தந்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பெயரையும் முகவரியும் மட்டுமே கேட்டனர். ஆனால் என் தம்பி ராஜசேகர் உயிரிழந்து விட்டார் என்ற தகவலை தனக்கு தெரிவிக்கவில்லை.அவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது வரை எதுவும் கூறாமல் இன்று அவர் உயிரிழந்த தகவல் மட்டுமே தங்களுக்கு தெரிந்தது.
காவல் துறையினர் திட்டமிட்டு சதி செய்து தம்பி ராஜசேகரை அடித்தே கொலை செய்துள்ளனர். ராஜசேகரன் நெஞ்சு மீது எட்டி உதைத்துள்ளனர். அவர் தொடையில் காயங்கள் உள்ளன. ராஜசேகருக்கும் காவல் துறையில் உள்ள சிலருக்கும் தொடர்புகள் உள்ளன. இவர்களுக்குள் ஏதோ ஒரு மர்மமான ஒன்று நடந்துள்ளது. இதனால் ராஜசேகரை அடித்துக் கொன்று விட்டனர்" என்றார்.
தொடர்ந்து ராஜசேகரின் தாய் உஷாராணி கூறுகையில், "என் மகன் உயிரிழந்தது செய்திகளில் பார்த்து தான் எங்களுக்கு தெரியும். காவல்துறையினர்தான் எனது மகனை அடித்துக் கொலை செய்து உள்ளனர். 5 காவலர்களையும் கைது செய்து அவர்களை காவல்துறை பணியில் இருந்து நீக்க வேண்டும்.
ராஜசேகர் உயிரிழந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ராஜசேகர் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். மீண்டும் இது போன்று காவல்துறையினரால் யாரும் கொள்ளப்படக் கூடாது. முதல்வர் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ராஜசேகர் உடலில் ஆங்காங்கே காயங்கள் உள்ளன. விரல் மற்றும் கால்களை உடைத்து உள்ளனர். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" இவ்வாறு கூறினர்.
இதையும் படிங்க: விசாரணைக் கைதி மரணம் - காவலர்களிடம் நீதிபதி விசாரணை