கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி சமூக ஆர்வலர் காயத்ரி கந்தாடை மற்றும் மாணவிகள் 5 பேர் பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து கோலமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்காக வாதாடச் சென்ற வழக்கறிஞர் மோகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கைது தொடர்பாக பேசிய சென்னைக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலமிட்டவர்களில் காயத்ரி கந்தாடை என்ற பெண்ணின் முகநூல் பக்கத்தில் பாகிஸ்தான் அமைப்புகளுடன் அவருக்கு தொடர்புகள் இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், காயத்ரி கந்தாடை உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மூத்த வழக்கறிஞர் வைகை, ” கோலம் மூலம் போராட்ட உணர்வை வெளிப்படுத்த குடிமக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், காவல்துறையினர் ஜனநாயக முறைப்படி நடத்தும் கோலப் போராட்டத்தற்குக் கூட அனுமதி மறுப்பதோடு, வழக்குப்பதிவும் செய்வது நியாயமல்ல. மேலும், காயத்ரி கந்தாடை என்ற தனிநபரின் விவரங்களை முறையான விசாரணை மேற்கொள்ளாமல் வெளியிட்டு அவருக்கு அவப்பெயர் வரவழைத்த சென்னைக் காவல் ஆணையர் விஸ்வநாதன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் “ என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர் காயத்ரி கந்தாடை, ” நான் ஒரு சமூக செயற்பாட்டாளர், மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறேன். எனது பணிகளுக்காக பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். எனவே, அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்களுடன் எனக்கு தொடர்பு ஏற்படுவது இயல்பு. இதை குற்றம் சுமத்தும் கண்ணோட்டத்துடன் காவல் ஆணையர் என்னை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஒரு குற்றவாளிபோல் அடையாளப்படுத்துவது முறையல்ல. காவல் ஆணையர் செய்தது பெண்களுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான துரோகம். என்னை பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு தீவிரவாதிபோல் அடையாளப்படுத்த முற்படுவது உண்மையல்ல “ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எந்தப் போராட்டம் நடத்த அனுமதி கோரினாலும் காவல்துறை அதற்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்திற்கும் பேச்சுரிமைக்கும் எதிரானது. ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட வழக்குப்பதிவு செய்வதும், நடவடிக்கைகள் மேற்கொள்வதும் மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது என மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘கோலம் போட்டது ஒரு குற்றமா’ - இளைஞர்களைக் கைது செய்த காவல் துறை, ஸ்டாலின் கண்டனம்!