இது தொடர்பாக அதன் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்க அரசு அமைத்துள்ள குழுவில், தற்போதைய துணைவேந்தர்கள் நால்வர், முன்னாள் துணைவேந்தர்கள் இருவர் என ஆறு கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு உயர் கல்வித் துறை செயலாளர் தலைவராக இருப்பார் என்று அரசாணை தெரிவிக்கிறது.
இது மரபை மீறும் செயல். துணைவேந்தர் நிலையில் இருக்கும் கல்வியாளர்களைக் கொண்ட குழுவிற்கு துணைவேந்தர் நிலையில் இருப்பவர் தலைவராக இருப்பதும், துறைச்செயலாளர் உறுப்பினர் - செயலராக இருப்பதும்தான் நியாயமான அணுகுமுறை. மேலும், இக்குழு ஆசிரியர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய விரிந்த குழுவாக, ஒரு கல்வியாளர் தலைமையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
அதோடு, இக்கல்விக்கொள்கையை நிர்வாக ரீதியில் அணுகாமல், கல்வியியல் நோக்கில் ஆராய வேண்டும். அரசு அமைத்துள்ள குழு, பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள் உள்பட சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்களின் கருத்தையும் அறிந்து அதன்பின் தனது அறிக்கையை இறுதிசெய்யும் வகையில், குழுவின் தொடர்பு முகவரியை தெரிவிக்க வேண்டும்.
இரு நூற்றாண்டு சமூகநீதி போராட்டத்தின் பயனாகத் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள வலுவான உயர்கல்வி நிறுவனங்களைச் சிதைத்துவிடும் பல கூறுகளைக் கொண்டதோடு, உயர் கல்வித் துறையில் மாநில அரசின் உரிமைகளை முற்றிலுமாக மத்திய அரசு எடுத்துக்கொள்ள வழி வகுத்திடும் பல்வேறு நடைமுறைகளைக் கொண்டதுதான் தேசிய கல்விக் கொள்கை 2020.
எனவே, இக்கொள்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இசைஞானி பாட்டுக்கு மறுவுருவம் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்