தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் நடத்தி வருகிறார். அதேசமயம் தற்போதும் செலக்டிவான, கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் சினேகா.
இந்தநிலையில் இன்று சினேகாவின் தந்தை ராஜாராமுக்கு 70ஆவது பிறந்தநாள். தந்தையின் பிறந்தநாளில் அவர் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் தரவேண்டும் என விரும்பினார் சினேகா. அதன்படி சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்ற சினேகா, அங்கிருந்த சிறப்பு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதை எதிர்பாராத சினேகாவின் தந்தை ராஜாராம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.
இந்த நிகழ்வின்போது அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துக்களுடன் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் சினேகாவின் தந்தை ராஜாராம். மேலும் அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மதியம் சுவையான பிரியாணி விருந்தளித்தும் அவர்களை மகிழ்வித்துள்ளனர்.
தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் விஹானும் மகள் ஆத்யந்தாவும் கூட கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு தங்களது கைகளால் உணவு பரிமாறியதுடன், அவர்களுக்கு பரிசாக புத்தகங்களும் வழங்கியது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இதையும் படிங்க: நடிகை அனன்யா பாண்டே வெளியிட்ட 'லைகர்' திரைப்பட புரோமோஷன் புகைப்படத்தொகுப்பு