சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்கவந்த பயணிகளையும், அவா்கள் உடமைகளையும் சுங்கத்துறையினர் சோதித்து அனுப்பினர்.
அப்போது சென்னையை சோ்ந்த 30 வயது ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய சூட்கேஸ், பைகளை சோதனையிட்டனர். அதில் டெலஸ்கோப்கள் 4 வைத்திருந்தார்.
அந்த டெலஸ்கோப்புகளின் கைப்பிடிகளுக்குள் 22 சிறிய பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த பிளாஸ்டிக் பைகளில் பட்டை தீட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட வைரக்கற்கள் இருந்ததை கண்டுப்பிடித்தனர். மொத்தம் 1,052 காரட் வைரக்கற்கள் இருந்தன. அவைகளின் மதிப்பு ரூ.5.76 கோடி.
இதையடுத்து சுங்கத்துறையினர் அந்த பயணியிடமிருந்த வைரக்கற்களை பறிமுதல் செய்தனர். அதோடு அவரின் பயணத்தை ரத்து செய்து, வைரம் கடத்திய பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
ஆப்ரிக்கா நாடுகளில் கிடைக்கும் பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை இந்தியாவிற்கு கடத்தி வந்து, இங்கு பட்டை தீட்டி பாலீஸ் போட்டு, மெருகூட்டி மீண்டும் வெளிநாட்டிற்கு கடத்த முயன்றபோது பிடிப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதைப்போல், பட்டை திட்டப்படாத 718 காரட் வைரக்கற்களை காங்கோ நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த மும்பை வாலிபரை டிஆா்ஐயும், சுங்கத்துறையினரும் இணைந்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த வைரக்கற்கள் பிடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமானநிலையத்தில் வழக்கமாக தங்கம், கரண்சி, போதைப்பொருள்கள் தான் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன. தற்போது பெருமளவு வைரக்கற்கள் பிடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீவிர குற்றங்களை தடுக்க சென்னை காவல் துறையில் புதுப் பிரிவு உருவாக்கம்