தமிழகத்தில் 28,053 கோடி ரூபாய் முதலீடு செய்ய, 28 நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "நான் பதவியேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, 5 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, தொழிற்சாலைகளுக்கான சரணாலயமாக தமிழகம் திகழ்கிறது.
தொழில்துறை நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், உலகத் தொழில்களை ஈர்க்கும் வகையிலும் 2 புதிய தொழில் கொள்கைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலம் வளர்ச்சி பெற தொழில்துறை மிகவும் முக்கியம். தொழில் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு ஏற்படுத்தும்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் தொகையில் ஆண்டொன்றிற்கு ஒரு பணியாளருக்கு அதிகபட்சமாக 24,000 ரூபாய்க்கு மிகாமல், முதல் மூன்று ஆண்டுகளுக்கு மானியமாக அரசு வழங்கும்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு 1949ல் இருந்து பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தினை, (Tamilnadu Industrial Investment Corporation - TIIC) மேலும் வலுப்படுத்தும் விதமாக 1,000 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கும்.
புதிய வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையும், புதிய ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையும் விரைவில் வெளியிடப்படும். தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ரூ.500 கோடியில் மூலதன நிதியம் 500 கோடி ரூபாய் உருவாக்கப்படும். 10 தகுதி வாய்ந்த தொழில்களுக்கு, முதல் 4 ஆண்டு காலம் வரையில் செயல்படத் தேவையான முக்கிய அனுமதிகளுக்கு விலக்களிக்கும், ’FastTN’ திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தொழில் நிறுவனங்களுடன் ரூ.28 ஆயிரம் கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!