சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி சர்வதேசப்பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் அச்சுறுத்தல் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி டிஜிபி திரிபாதி உத்தவிட்டார்.
பாபாவுக்கு ராசி மூன்று
மாணவிகள் மூலம் பெறப்பட்ட மூன்று புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு உள்ளிட்ட மூன்று தனித் தனி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணையை சிபிசிஐடி காவலர்கள் தொடங்கியுள்ளனர்.
சிபிசிஐடி ஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் விசாரணை அலுவலர்களாக காவல் துணைக் கண்காணிப்பாளர் குணவர்மன், ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிபிசிஐடி மூலம் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டு ஒரு குழு சிவசங்கர் பாபாவிடம் விசாரணை மேற்கொள்ள டேராடூன் விரைந்துள்ளது. இரண்டாம் குழு, சிவசங்கர் பாபாவின் செல்போன் டவர் லொக்கெஷனை வைத்து இருப்பிடத்தை கண்காணித்து, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாபா அறையிலும் சோதனை
மேலும், மற்றொரு குழு புகார் அளித்த மாணவிகளிடம் வாக்குமூலங்கள் பெறுவது, சுசில் ஹரி பள்ளிக்குச் சென்று நேரடி விசாரணை நடத்தி வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சிவசங்கர் பாபா காணொலி அழைப்பு மூலம் பேசி பாலியல் அச்சுறுத்தல் கொடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ள நிலையில், அவரின் அறையை சோதனை மேற்கொண்டு லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்து ஆதாரங்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வெறும் 1 மணி நேரத்தில் 73,250 கோடி ரூபாயை இழந்த அதானி: அந்த அந்தஸ்தும் பறிபோகிறது?