சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இன்று(14.09.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிப்படுத்தவும், 'சிற்பி' (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு (Nodal Officers) பணி நியமன ஆணைகளையும், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
'சிற்பி' திட்டம்: தமிழ்நாட்டில், சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் விளங்கவும், பொதுமக்கள் அச்சமின்றி அமைதியான முறையில் வாழ்வதற்கும், பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், காவல் துறையுடன், பள்ளி மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், காவல் துறையின் உண்மையான நண்பர்களாகவும் மாற்றும் உயரிய நோக்கில் “சிற்பி” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிடவும்; சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடாமல் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளவும், போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவர்களை நல்வழிப்படுத்தவும், தாம் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை வளர்ப்பதற்கும், ஒரு வழிகாட்டி தேவைப்படுவது அறிந்து, பள்ளி மாணவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக, காவல் துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவாக 'சிற்பி' (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு நற்பண்பு, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, பொது அறிவு ஆகியவற்றை கற்றுக்கொடுப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகள், யோகா போன்றவையும் கற்றுக் கொடுக்கப்படும்.
இதன் முதற்கட்டமாக 100 அரசுப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளிகளில் இருந்து 8ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் அவர்களது விருப்பத்தின்பேரில், தன்னார்வலர்களாக (Volunteers) தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும், அம்மாணவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். அத்துடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக, விளையாட்டுப்பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக்கொடுக்கப்படும்.
நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, பிறருக்கு உதவுதல், தாம் கற்ற கல்வியையும், நல்லொழுக்கத்தையும் பிறருக்கு எடுத்துரைத்தல், கண்டுகளித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்கு கற்றுத்தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க இச்சிறப்பு வகுப்புகள் உதவும்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் காவல் துறையின் செயல்பாடுகள், அமைப்பு, பணிகள் குறித்தும், அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை பெருநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
இவ்வகுப்புகள் மூலம் அவர்களை சிற்பியாக உருவாக்கி, இந்த சிற்பிகள் மூலம் அப்பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் நற்பண்புகள் கற்பிக்கப்பட்டு, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக அனைவரையும் உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் நோக்கமாகும். முன்னதாக, முதலமைச்சர் முன்னிலையில், சிற்பி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உறுதிமொழி: “நான் இச்சிற்பி திட்டத்தின் வாயிலாகச் சிறந்த மாணவனாக / மாணவியாகத் திகழ்வேன், சாலை விதிகளை மதிப்பேன், சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன், எந்நாளும் போதைக்கு அடிமையாக மாட்டேன், இயற்கையைப் பாதுகாப்பேன், பகைமை பாராட்டாமல் அன்பை அனைவரிடமும் பகிர்வேன், சமுதாயத்தில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு' - அமைச்சர் செந்தில் பாலாஜி