கரோனா தொற்று பரவலைத் தடுக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே மருந்து ஒன்றை கண்டுபிடித்துவிட்டதாகவும், முதலமைச்சர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளில் 2 பேரைக் குணப்படுத்தியதாகவும்; முதலமைச்சர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் குறித்த தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் தணிகாசலம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தணிகாசலத்திடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினர் மே 6ஆம் தேதி, தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 20 வரை நீதிமன்ற காவலில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தனக்கு பிணை கோரி தணிகாசலம் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தபோது, தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்தவரா, சிகிச்சை அளிப்பதற்கான தகுதி உள்ளதா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளதால் 7 நாள்கள் காவல் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.
அப்போது பூந்தமல்லி கிளை சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரான தணிகாசலம், விசாரணைக்கு இதுவரை ஒத்துழைத்தது போல், இனியும் நடக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், காவலில் செல்ல விருப்பமில்லை எனவும் கூறினார்.
மேலும் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதால், தனக்கு பிணை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ரோஸ்லின் துரை, 6 நாட்கள் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று முதல் மே 18ஆம் தேதி வரை விசாரணை நடத்திவிட்டு, மே 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த 6 நாட்களிலும் தணிகாசலத்தை, அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி அளித்துள்ளார்.