கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகலை கடைப்பிடிப்பதன் மூலம் நோய் பாதிப்பு பரவாமல் தடுக்க முடியும் என்ற அடிப்படையில் போக்குவரத்து முடக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து நிறுத்தப்படாது என்றும், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அத்தியாவசிய பொருள்கள், அன்றாட சமையலுக்குத் தேவையான மளிகை சாமான்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மளிகைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
பருப்பு, உளுந்து, ரவை, எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாக்கெட் பொருள்களுக்கு பதிலாக சில்லறை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தங்களுக்குத் தேவையான மளிகை பொருள்கள் கிடைக்கவில்லை என பல உணவகங்களும் கூறுகின்றன.
இதனால் பார்சல் உணவு சேவை பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குத் தேவையான சரக்கு வராததால்தான் தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில வியாபாரிகள் கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.