சென்னை: இதுகுறித்து மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டுநர் தொழிலை நம்பியிருந்த பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்ந்துகொண்டே போக ஒன்றிய, மாநில அரசுகள் தங்களின் பங்கிற்கு விற்பனை வரியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை செய்தன.
தற்போது ஊரடங்கு தளர்விலும் போதிய வருமானமின்றி ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்துவரும் நிலையில் ஆட்டோக்களுக்கான சாலை வரி, காப்பீடு, வங்கி தவணை என்று எதையுமே அரசு ரத்து செய்ய முன்வரவில்லை.
மேலும் புதிய அரசு வேலைக்கு செல்லும் மகளிரை அரசுப் பேருந்தில் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கி உள்ளது. இந்தத் திட்டம் வரவேற்பிற்குரியது. அதன் காரணமாக ஆட்டோவில் செல்லும் மகளிர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
எனவே ஆட்டோ ஓட்டுநர்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு அரசு அலுவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பானவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் குழு ஒன்றினை அரசு அமைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்' - கமல் ஹாசன்