வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 74ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி தலைமைச் செயலகத்தில் தூய்மை பணிகள் நடைபெற்றுவருகின்றன. அன்றைய நாளில் முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கும் என்பதால், கொடிக்கம்பத்தையும் பணியாளர்கள் தூய்மைப்படுத்தினர். அப்போது, கொடிக்கம்பத்தில் மைனா முட்டைகள் இருப்பது தெரிந்ததையடுத்து, உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மைனா முட்டைகளைப் பாதுகாப்பாக அங்கிருந்து எடுப்பதற்காக உயர் நீதிமன்ற வளாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 170 அடி வரை செல்லும் ஏணி பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.
பின்னர், நூறு அடி கொடிக்கம்பத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மைனா முட்டைகளைப் பாதுகாப்பாக மீட்டனர். அதோடு, மைனாவின் கூட்டையும் கலைக்காமல் பத்திரமாக எடுத்து வேறு இடத்திற்கு மாற்றினர்.
இதையும் படிங்க: இ-பாஸ் நடைமுறை மனித உரிமை மீறிய செயலா? - அரசு பதிலளிக்க உத்தரவு