தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 18 முதல் டிசம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் முதல் முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மருத்துவப்படிப்பில் வழங்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்த முடியாத சூழலால், மாணவர்கள் சிலர் தங்களுக்குரிய இடங்களை தேர்வு செய்யாமல் விட்டுச் சென்றனர்.
அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கட்டணங்களை அரசே செலுத்தும் என்ற காலதாமத அறிவிப்பாலும், கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலர் இடங்களை தேர்வு செய்யாமல் சென்றனர்.
இதையடுத்து, கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் பங்கேற்க இயலாத தங்களுக்கு, கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்ய முன்னுரிமை வழங்க வேண்டும் என மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதனை ஏற்ற உயர் நீதிமன்றம் கலந்தாய்வில் அம்மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 47 இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது, ”இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், ஏற்கனவே கலந்து கொண்டு கட்டணம் செலுத்த முடியாததால் நீதிமன்றம் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் 23 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 24 இடங்களும் என 47 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. ஏற்கனவே அரசு உறுதியளித்தது போல இவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும். கலந்தாய்வில் மருத்துவப் படிப்பில் தங்களுக்கு இடங்கள் வேண்டாம் எனக் கூறிய மாணவர்களுக்கு அனுமதி கிடையாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீடிப்பு!