சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமைக் கழகம் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் தேர்தல் கூட்டணியை இறுதிசெய்ய திமுக தீவிரம்காட்டும் நிலையில், தொகுதிப்பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
திமுக, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் திமுகவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதிகள், எந்தச் சின்னத்தில் போட்டி என்பது குறித்து தகவல்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்
இந்தச் சந்திப்பின்போது, தொகுதிப்பங்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 5 முதல் 7 சீட்டுகள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.