சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த தனியார் நிறுவன கட்டடங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் இன்று (ஏப்.21) சீல் வைத்தனர்.
இன்று மட்டும் சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள 'பெனின்சுலா' எனும் உணவகத்துடன் கூடிய தனியார் விடுதி ஒன்று கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சொத்து வரி நிலுவைத்தொகை 15 லட்சத்து 45 ஆயிரத்து 545 ரூபாயாக உயர்ந்தது. இதனை அடுத்து, சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான அலுவலர்கள் இன்று பெனின்சுலா உணவக கட்டடத்திற்குச் சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சி நடவடிக்கை: மேலும், அண்ணாசாலை, தேனாம்பேட்டையில் உள்ள Pilot Pen Company என்ற தனியாருக்குச் சொந்தமான பயன்பாடற்ற கட்டடம் ஒன்றுக்கு உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து வரியை நிலுவையில் வைத்திருந்த நிலையில் 43 லட்சத்து 96 ஆயிரத்து 586 ரூபாயாக நிலுவைத் தொகை உயர்ந்துள்ளது. மேலும், சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கவிஞர் வைரமுத்துக்கு சொந்தமான 'பொன்மணி' திருமண மண்டபத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் அக்கட்டடத்திற்கும் இன்று சீல் வைக்க முடிவு செய்தனர்.
தப்பித்தது வைரமுத்துவின் சொத்துகள்: இது குறித்து தகவலறிந்த கவிஞர் வைரமுத்து, திருமண மண்டபத்தின் சொத்து வரி நிலுவைத் தொகையான 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாயை மண்டப மேலாளர் மூலம் வங்கி வரைவோலையாக மாநகராட்சிக்கு செலுத்தினார். இதனால், வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைக்கும் முடிவைக் கைவிட்டனர்.
இதனால், கவிஞர் வைரமுத்து சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாய் வரை செலுத்தாமல் இருந்தது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக்குழுவின் புதிய உறுப்பினர் நியமனம் - அரசாணை வெளியீடு