சென்னை: நாடு முழுவதும் தற்போது கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் அளித்துள்ளன.
நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில், கரோனா தொற்றின் புதிய வகைப் பரவி வருகிறது.
இதற்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இவை டெல்டா வகை கரோனா தொற்றை விட மிக ஆபத்தானது என்றும், முன்னதாக தொற்று பாதித்த நபரை இவை குறிவைத்து தாக்கி வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்கள்
மொத்தமாக 58 நாடுகளில் பரவியுள்ள ஒமைக்ரான் தொற்று, தற்போது இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான், தற்போது குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்காக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் தெரிவித்ததாவது, 'புதிய வகை கரோனா தொற்றால் நிலைமை மோசமாக இருக்கும் என எதுவும் இல்லை. ஆனால், அதனுடைய பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். கரோனா நோய்த்தொற்று இன்னும் உள்ளது. இதன் தாக்கம் உலகளவில் பல்வேறு வகைகளில் காணப்படுகிறது.
ஒமைக்ரான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்
தெற்கு ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை, நாம் தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விடக் கூடாது. கண்காணிப்பு, பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி போடும் பணிகளை விரைவாக அதிகரிக்க வேண்டும்.
ஒமைக்ரானின் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் தொற்று நோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதன் தாக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது சற்று கடினம். இது தொடர்பாக உரிய தரவுகளை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொடர்பாக பகுப்பாய்வு செய்ய ஆயிரக்கணக்கான நிபுணர்கள் களத்தில் உள்ளனர்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் அச்சுறுத்தல்: கரோனா பரிசோதனை அதிகரித்த சென்னை மாநகராட்சி