சென்னை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கிஷோர் விக்யானிக் புரோட்சகான் யோஜனா திட்டம் மூலம் அறிவியலில் ஆர்வமுள்ள 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திறனறிவு தேர்வு நடத்தி தகுதியானவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திறனறிவு தேர்வானது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழ்நாட்டில் 60 சதவிகிதம் மாணவர்கள் தமிழ் வழியில் படித்துள்ளதால் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, பிற மொழி பேசுபவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி திறனறிவு தேர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (நவ.15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாநில மொழிகளில் திறனறிவு தேர்வை நடத்துவதற்கான செயல்முறை முடிக்க ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் திறனறிவு தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த ஆண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வை நடத்த அனுமதி அளித்ததுடன், அடுத்த ஆண்டிலிருந்து பட்டியலில் உள்ள மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிட்டு வழக்கு முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க:சென்னை மக்களுக்கு எச்சரிக்கை: மீண்டும் வருகிறது கனமழை