சென்னை: தமிழ்நாட்டில் மதுக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதில், "கைத்தட்டியில் உள்ள வாசகங்களை கீழிருந்து மேலாகப் படிக்கவேண்டும் போல. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறந்தால்தான். அடித்தட்டு மக்களுக்கு ஐந்தாயிரம் வழங்கமுடியும். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தரும் செய்தியா?
கடந்தாண்டு நீங்கள் போராடியது அதிமுகவை எதிர்ப்பதற்காக மட்டுமா? இல்லை அடித்தட்டு மக்களைக் காக்கவேண்டும் என்ற உண்மையான அக்கறையிலா? போராடியது அரசியலுக்காகத்தான் என்றால், சொல்வதற்கு ஒன்றுமில்லை.
தாராளமாக டாஸ்மாக்கைத் திறங்கள். மக்கள் மீதான அக்கறையில்தான் என்றால் மதுக்கடைகள் திறப்பை குறைந்தபட்சமாக சிலமாதங்களாவது தள்ளிப்போடுங்கள். டாஸ்மாக் கடைகளில் கணவனிடமிருந்து தினந்தோறும் பிடுங்கி மனைவிக்கு ஒருநாள் நிவாரணம் தரப்போகிறோமா. தந்தைக்குச் சாராயம் கொடுத்து சம்பாதித்த பணத்தில் பிள்ளைக்கு சத்துணவு கொடுக்கப் போகிறோமா?
டாஸ்மாக் வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்திப் பார்ப்பதற்கும், மாதக்கணக்கில் மதுக்கடைகள் மூடினால் சமூகத்தில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆதாரப் பூர்வமாக உணர்ந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பை 'கரோனா' கொடுத்துள்ளது.
ஏழைக் குடும்பங்களில் கரோனா ஏற்படுத்திய உளவியல் ரீதியிலான தாக்கம், பொருளாதார இழப்பைக் கருத்திற்கொண்டு இன்னும் 6 மாதத்திற்கோ அல்லது ஓரண்டிற்கோ மதுக் கடைகளை திறக்காமல் இருப்போம்.
இந்த காலகட்டத்தில் கிடைக்கும் களப்படிப்பினையின் அடிப்படையில் அடுத்த கட்டத்தை முடிவுசெய்வோம் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுக்குமானால், ஸ்டாலின் அவர்கள் உண்மையிலேயே வித்தியாசமான ஆட்சியைத் தரவிரும்புகிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
சாராயக்கடை இல்லாமல் ஆட்சி நடத்தமுடியாது என்ற பூச்சாண்டி வாதத்திற்குப் பயந்து 'வழக்கம் போல்' மதுக் கடைகள் திறக்கப்படுமானால், அடுத்தகட்டமாக 'வழக்கம் போல்' ஊழலாட்சியும், அராஜக ஆட்சியும் தொடரும் என்றுதான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும்!" என்று பல கேள்விகளை ஸ்டாலின் தலைமையிலான அரசிடம் முன்வைத்துள்ளார்.