லட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்திவந்த நவீன் பாலாஜி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து 2000ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மற்றும் ரிசார்ட், ஹோட்டல் தொழிலை தொடங்கினார். ரிசார்ட் தொழில் லாபம் ஈட்டாததால், 2016ஆம் ஆண்டு அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
அப்போது, சசிகலாவின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு சிலர் அவரை அணுகியுள்ளனர். அவரது சொத்துக்களுக்கு 168 கோடி ரூபாய் விலை நிர்ணயித்து, அதற்காக 148 கோடி ரூபாய் அளவுக்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சசிகலாவின் பிரதிநிதிகள் எனக் கூறியவர்கள் கொடுத்துள்ளனர். பின், இந்த பரிவர்த்தனை திடீரென ரத்து செய்யப்பட்டது.
அச்சமயத்தில், நவீன் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 148 கோடி ரூபாய் பணத்தை, சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக்கூறி, முடக்க உத்தரவிட்டனர்.
இதை ரத்து செய்யக் கோரி நவீன் பாலாஜி உள்பட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ரிசார்ட்டுக்கான கிரையத் தொகைக்காக மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பெறும்படி சசிகலாவின் பிரதிநிதிகள் தன்னை நிர்பந்தித்ததாக குறிப்பிட்ட அவர், திடீரென்று இந்த பரிவர்த்தனையை ரத்து செய்வதாக அவர்கள் தெரிவித்ததாகவும், பணத்தை திருப்பிக் கொடுக்க இருந்தபோதுதான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து முடக்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பினாமி பரிவர்த்தனை பணம் எனக் கூறுவது தவறானது என்பதால், முடக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இது தொடர்பாக, பிப்ரவரி 19ஆம் தேதி பதிலளிக்கும்படி, வருமான வரித்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: மாவட்ட நீதிபதிகள் தேர்வில் சலுகை - உயர் நீதிமன்றம் மறுப்பு