சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சசிகலா தான் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகளை வீட்டிலிருந்து உன்னிப்பாக கவனித்துவந்தார்.
இதுவரை சுமார் 50 ஆடியோக்கள் ரிலீஸ்
தேர்தல் முடியும் வரை அமைதி காத்த சசிகலா, தற்போது தொண்டர்களிடம் பேசிவருவதால் அரசியலில் ரீ- என்ட்ரி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக தொண்டர்களுடன் சசிகலா பேசிவரும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவருகின்றன. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
அதிமுகவின் தீர்மானம்
இதையடுத்து அதிமுக தலைமை உத்தரவின்பேரில் சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றனர். மேலும் சசிகலாவுடன் செல்போனில் பேசிய பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய அதிமுகவினரை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
'தொண்டர்கள் இணைய வேண்டும்'
இந்நிலையில் தற்போது சசிகலா தரப்பில் புதிய ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொண்டர் ஒருவரிடம் உரையாடிய சசிகலா, "அமமுக-அதிமுக தொண்டர்கள் இணைய வேண்டும் என்றுதான் எண்ணினேன். திமுகவை தோற்கடிக்க நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்.
அதிமுக வெற்றிபெற ஒதுங்கியிருந்தேன். இனி கட்சி வீணாவதைப் பார்க்க முடியாது. பெண்ணால் வளர்க்கப்பட்ட கட்சி, பெண்களை இழிவுப்படுத்திப் பேசிவருவது வருத்தமளிக்கிறது" எனப் பேசியிருப்பார்.
இதையும் படிங்க: 16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள்: இதுவரையில் நடந்தது என்ன?